முன்பு ஒரு காலத்தில், பிச்சைக்காரன் ஒருவன் பாழடைந்த வீட்டில் தங்கி பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு தெரியாது, அவனுடைய வீட்டுக்கு அடியில் மிக பெரிய பொக்கிஷம் இருப்பது. அவனுக்கு தெரியாது, உண்மையில் அவன் அந்த நாட்டு ராஜாவை விட பெரிய செல்வந்தன் என்று. கடைசி வரை, பிச்சைக்காரனாகவே வாழ்ந்து மடிந்தான்.
நாமும் அப்படி தான், நமக்குள் இருக்கும் பொக்கிஷம் தெரியாமல் பிச்சைக்காரனை போல் வாழ்ந்து மடிகின்றோம். எடுத்து பகிர பகிர, மேலும் திரண்டு வரும் அமுதசுரபியை போன்று, வாழ்க்கையின் உண்மையான அனைத்து வளங்களும் நமக்குள்ளே இருக்கின்றது. அனைத்து நிம்மதியும், சந்தோசமும், அன்பும், திடமும் நமக்குள் இருக்கின்றது.
அதை உணர்ந்து வெளிக்கொண்டு வராமல், அவற்றை வெளியே தேடி பிச்சை எடுத்து கொண்டு அலைகின்றோம். நிம்மதி தேடி, சந்தோசம் தேடி அலைகின்றோம்; அன்புக்காக, காதலுக்காக, உறவுக்காக அடுத்தவரிடம் இருந்து ஏங்குகின்றோம்; மானம், கௌரவம் போய்விட்டது என வேதனையில் புலம்புகின்றோம். மரியாதையை அடுத்தவரிடமிருந்து எதிர்பார்க்கும் போதே, நம் சுயமரியாதை போய்விடுகிறது।
பணம், புகழ், அந்தஸ்த்து உயர, உயர... நிம்மதி, சந்தோசம் போவது கூட தெரியாமல் ஆசை மோகத்தில் ஓடுகின்றோம். வெளிப்புற ஜோடனைகளை நோக்கி நாம் ஓடும் போது, நம் உண்மையான வளம், பிரகாசம் நம்மிடம் இருந்து மறைக்கப்படுகின்றது, நமக்கு மறுக்கப்படுகின்றது.
"உன்னிடம் குறைவு எதுவும் இல்லை என்பதை நீ உணரும்போது, உலகம் முழுவதும் உனக்கு சொந்தமாகிறது." — லாவோ-ட்சு
ஈகோவின் வெளிப்பாடு
எங்கிருந்து வந்தது இந்த பிச்சைக்காரத்தனம்? அது நம்முடைய ஈகோ எனும் "நான்" என்ற அகங்காரத்தின் வெளிப்பாடு. ஈகோவானது ஆசை, பயம், அறியாமை என்ற மூன்று வகை விஷங்களால் உருவாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப் படுகின்றது.
முதலில், ஆசையில் பலவற்றை பற்றிக் கொண்டு நமதாக்கி கொள்ள முனைகின்றோம், பிறகு அவற்றை பத்திரப்படுத்தும் பயத்தில் நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு சுவரை உருவாக்கி கொள்கின்றோம். இந்த சுவர் வலுவடையும் போது, அது ஈகோவாக, நம்மை அடுத்தவர்களிடமிருந்தும், இயற்கையிலிருந்தும், உண்மை நிதர்சனத்திலிருந்தும் பிரித்து தனிமை படுத்திவிடுகின்றது। நம் வாழ்கை போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு என போராட்டமாகி விடுகின்றது।
"தேவைகள் மிகக் குறைவு, ஆசைகளுக்கு அளவே இல்லை."
"மனிதன் ஆச்சரியமானவன் தான். ஏனென்றால், பணம் சம்பாதிப்பதற்காக தன் ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான். பின்னர் இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்க சேர்த்த பணத்தை செலவு செய்கின்றான். எதிர்காலத்திற்கு நீடிக்கும் கவலைகளில் நிகழ்காலத்தை அனுபவிக்க மறக்கின்றான்; அதன் விளைவாக நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் வாழாமல் போய்கின்றான். எப்போதும் சாகவே போவதில்லை என்பது போல் வாழ்கின்றான், ஆனால் உண்மையில் வாழாமலே செத்து மடிகின்றான்." — தலாய் லாமா
ஈகோவின் உருவாக்கம்
ஈகோ என்பது சிறு வயது முதல், நாம் வாழும் சமூகத்திலிருந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட, திணிக்கப்பட்ட ஒன்று. ஈகோ சிறு வயது முதல், படிப்படியாக வளர்வதால், அந்த ஈகோவுடன் நம்மை முற்றிலும் அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த ஈகோவாகவே மாறி விடுகின்றோம். அது நம் உண்மையான நிதர்சனம் இல்லையென்றாலும், அதை திருப்தி செய்ய நம் வாழ்நாள் முழுவதும் போராடி, நம் வாழ்நாளை அதிலே தொலைக்கின்றோம்.
ஈகோவை திருப்தி செய்து நீடித்த நிம்மதி காண, உண்மையான சந்தோசம் காண எந்த வழியும் இல்லை. ஆசைகளை நோக்கி நாம் ஓடும் போது, அவை மேலும் பெருகுவது மட்டுமின்றி, அவற்றிற்கு மேலும் அடிமையாக்கப் படுகின்றோம். பாதுகாப்பை நோக்கி நாம் ஓடும் போது, பயத்தை மேலும் அதிகப் படுத்துகின்றோம்.
"துயரத்தை வெறுக்கின்றாய், ஆனால் சிறுபிள்ளைத்தனமாக அதற்கான காரணங்களை நேசிக்கின்றாய்."
ஈகோவின் சுழற்சி
நாம் போராடி சாதித்து நம் நிலையை நாட்டும் போது, ஈகோ மேலும் வலுப்பெற்று நம் அகங்காரம் அதிகரிக்கின்றது. நாம் தோற்று நம் நிலைகுலையும் போது, ஈகோ காயம் அடைந்து, நம்மை பயத்தில் முடக்கி விடுகின்றது। ஈகோ ஆணவத்தில் ஆட்டம் போடும், இல்லையென்றால் பலிகடா மனநிலையில் முடங்கி போகும்।
ஈகோ தன்னுடைய வலிகளை, பிரச்சனைகளை பெரிது படுத்தும், இல்லையென்றால் அடுத்தவருக்கு புரிந்து கொள்ளாது. ஈகோவிற்கு தன்னுடைய குறைகள் பெரிதாக தெரியாது, அடுத்தவரின் குறைகளை பெரிது படுத்தும். தன் கோபத்திற்கு, இயலாமைகளுக்கு, தவறுகளுக்கு சாக்கு போக்கு காரணங்கள் சொல்லும்; அதுவே அடுத்தவருக்கு என்றால் குறைகள் சொல்லும், ஏற்று கொள்ளாது।
தன் எண்ணங்கள், கருத்துக்கள் மட்டுமே சரி என்று முரட்டுத்தனமாக ஆவேசப்படும். மற்றவரின் கருத்து வேறுபாடுகளை ஏற்று கொள்ள தெரியாமல், உயிர் போவது போல் போராடும். வெறும் வார்த்தைகளுக்காக உயிரையும் எடுக்கும். அதுவே பல போர்களுக்கும், மத சண்டைகளுக்கும், வெறுப்புகளுக்கும் காரணம்.
"ஆணவத்திற்கு அடுத்தவரின் நிலையிலிருந்து பார்க்க தெரியாது."
ஈகோ மற்றும் பிரிவினைவாதம்
உண்மையான அன்பு, பணிவு இருக்கும் இடத்தில் ஈகோ அழிந்து போதும். ஈகோ வாழ்வதற்கு பிரிவினைவாதம் முக்கியம். எனவே இனம், ஜாதி, மதம், மொழி, நாடு என எல்லாவற்றிலும் பிரிவினைவாதம் செய்யும்.
அனைவரையும் ஏற்றுக்கொள்ள, அரவணைக்க, உலகத்திலுள்ள அனைத்து ஞான வளங்களையும் பரந்த மனதுடன் பருகிக் கொள்ள, ஈகோவின் பிச்சைக்காரத்தனத்திற்கு தெரியாது। ஒரு ஆசானையோ, புத்தகத்தையோ பற்றிக் கொண்டு, அதிலுள்ள தவறுகளை பார்க்க மறுக்கும், மற்ற ஆசான்களிடமிருந்து, புத்தகங்களிலிருந்து நல்லவற்றை ஏற்றுக்கொள்ள தயங்கும். ஈகோவை அழிக்கும் நோக்கத்தில் உருவான ஆன்மிக பாதைகள், ஈகோவை வளர்க்கும் மதங்களாக மாறி போனது.
"எல்லா நற்பண்புகளுக்கும் உறுதியான அடித்தளம் பணிவு." — கன்பூசியஸ்
ஈகோ மற்றும் தாழ்வுமனப்பான்மை
ஈகோவிற்கு தெரிந்ததெல்லாம் கண்முடீத்தனமான கோபம், முரட்டுத்தனம், ஆவேசம். உண்மையான தைரியம் இருக்கும் இடத்தில் ஈகோ அழிந்து போதும்। ஈகோ என்பது பிச்சைக்காரத்தன மனநிலையின், பயந்தான்கொள்ளி மனநிலையின் வெளிப்பாடு. அதனால் தாழ்வுமனப்பான்மை மனிதர்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது।
அதை மறைக்க, தன்னை உயர்த்தி, அடுத்தவர்களை தாழ்த்தி, அடக்கி, முடக்கி, ஏமாற்றி வைக்க முனைகின்றனர். அதற்காக, உருவம், அழகு, திறமை... இனம், ஜாதி, மதம்... அதிகாரம், அந்தஸ்த்து, புகழ், பணம், பதவி, பட்டம்... என ஏதாவது ஒரு விதத்தில் தனனை உயர்த்திக் காட்ட போராடுகின்றனர். அதனால் அவர்களுக்கும், அடுத்தவர்களுக்கும் அவர்கள் ஏற்படுத்தும் கொடுமைகள், பரிதாபங்கள், துயரங்கள் கோடான கோடி!
"நீ எதைப் பற்றி தற்பெருமை கொள்கின்றாயோ, அது உன்னிடம் எது இல்லை என்பதை சொல்லும்."
ஈகோவின் அழிப்பு
ஈகோ இருக்கும் வரை, அது நமக்கும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் துயரத்தையே தரும். ஆழமான புரிதல், ஞானம் வரும் போது, ஈகோ தரும் பாதுகாப்பு போலியானது என்பதும், ஈகோ தரும் உயர்வு உண்மையில் நம் பரிதாபமான அடிமைத்தனம் என்பதும் புரிபடும். அப்போது வாழ்க்கையை உள்ளது-உள்ளபடியே தைரியமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும்.
ஈகோவை நம்மிலிருந்து முழுமையாக அழிக்கும் போது, நம் உண்மையான நிதர்சனம் — அதன் நிலைத்த அமைதி, மனநிறைவு, மகிழ்ச்சி, அன்பு, அறிவு, ஆற்றல் — பிரகாசமாக மிளிரும். அதுவே நம் உண்மையான கண்ணியம், சுதந்திரம்.
"குருட்டு உலகம் இது; இங்கே ஒரு சிலருக்கு மட்டுமே ஆழ்ந்த நுண்ணறிவு உள்ளது. வலையில் இருந்து விடுபட்டு சுதந்திரமாய் பறக்கும் பறவைகள் போல, ஒரு சிலரே பேரானந்த நிலையை அடைகின்றனர்." — புத்தர்
விஷங்கள் மற்றும் மருந்துகள்
விஷம் 1: ஆசை
வெளிப்பாடுகள்: பற்று, மோகம், ஏக்கம், பொறாமை, போட்டி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், விரக்தி, திருப்தியின்மை, அடிமைத்தனம், போராட்டம்
பரிதாபநிலை: பிச்சைக்காரத்தனம்
மருந்து: அன்பு
விஷம் 2: பயம்
வெளிப்பாடுகள்: கோபம், ஆவேசம், முரட்டுத்தனம், சண்டை, வெறுப்பு, பதட்டம், பொறுமையின்மை, நம்பிக்கையின்மை
பரிதாபநிலை: பயந்தான்கொள்ளித்தனம்
மருந்து: தைரியம்
விஷம் 3: அறியாமை
வெளிப்பாடுகள்: மடமை, மயக்கம், மாயை, ஏமாளித்தனம், குருட்டுத்தனம், தவறான பார்வை, தெளிவின்மை
பரிதாபநிலை: மடத்தனம்
மருந்து: ஞானம்
விஷம்: ஈகோ
வெளிப்பாடுகள்: அகங்காரம், ஆணவம், சர்வாதிகாரம், சுயநலம், கர்வம், தற்பெருமை, தனிமை, மன அழுத்தம்
பரிதாபநிலை: அடிமைத்தனம்
மருந்து: ஈகோயின்மை
பின் குறிப்பு
உண்மையான ஞானங்கள் கண்ணை மூடி கனவில் வாழவோ, கற்பனை உலகில் மிதக்கவோ, உலக வாழ்க்கையை வெறுத்து அல்லது அதற்கு பயந்து ஒழிந்து கொள்ளவோ அல்ல. அவை நம்முடைய நிஜமான, நடைமுறை வாழ்க்கைக்கானது.
பிச்சைக்காரத்தனம் என்பது வறுமை மனநிலை, இது குறுகிய மனம் மற்றும் மூடிய இதயத்தின் வெளிப்பாடு. இது உண்மையான தேவை அல்லது உதவி நாடுவதை பற்றியதல்ல.