தெளிந்தறிநிலை என்றால் என்ன?

கவலைகலில் மூழ்கி, கற்பனை உலகில் மிதந்து, மனதில் தனக்குத் தானே கதைகள் சொல்லிக்கொண்டு - என எவ்வளவு நேரம் கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் நம் வாழ்நாளை வீணடிக்கின்றோம். இது துக்கத்திற்கும், மனச்சோர்வுக்கும் தான் இட்டு செல்லுமென ஆய்வுகள் காட்டுகின்றன. முடிந்து போன கடந்த காலத்தில் சிக்கிக் கொள்வதற்கு பதிலாக, அல்லது எதிர்காலத்திற்கு நம் வாழ்க்கையை தொடர்ந்து தள்ளிப் போடுவதற்கு பதிலாக, நிஜமான இந்த தருணத்தில் விழித்துக் கொண்டு, வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே மனந்திறந்து அணுகும் முறையே தெளிந்தறிநிலை.

கோபம், ஆவேசம், எரிச்சல், பயம், அலுப்பு, மனச்சோர்வு, ஏக்கம், அடிமை பழக்கம் - போன்றவற்றை பழக்கதோசமாக எதிர்கொள்வதற்கு பதிலாக, அவற்றை திறனுடன் தேர்ந்த முறையில் கையாள உதவும் இடைவெளியையும் சுதந்திரத்தையும் தெளிந்தறிநிலை நமக்கு தருகின்றது.

தெளிந்தறிநிலை (தெளிவாக அறியும் விழிப்புணர்வு) என்பது கவனமுடன், அக்கறையுடன், விழிப்புணர்வுடன், தெளிவாக அறியும் நிலை. நாம் எதை செய்தாலும் (உட்கார்ந்து இருந்தாலும், நடந்தாலும், சாப்பிட்டாலும், வேலை செய்தாலும், பேசினாலும்...), அதை கவனமுடனும், அக்கறையுடனும், விழிப்புணர்வுடனும், தெளிவாக அறிந்து செய்வது. இது எளிமையானது, ஆனால் சுலபமானது அல்ல. அதற்கு தொடர்ந்த, விடாமுயற்சியுடனான தேர்ந்த பயிற்சி தேவைப்படுகின்றது.

நம் மனதில் இந்நிலை உயர்ந்து நீடிக்கும்போது மனம் தெளிவு காணும், நுண்ணறிவு பிறக்கும், ஆழ்ந்த கற்றல் சாத்தியமாகும்; மனதில் குழப்பங்கள் நீங்கி, அமைதி ஏற்படும்; மனக்காயங்கள் குணமாகி, ஆரோக்கியம் தரும்; மனமாசுகள் அழிந்து, வாய்மை பிறகும்; துக்கம் விலகி, இன்பம் மலரும்; அடிமைசங்கிலிகள் உடைந்து, சுதந்திரம் கிட்டும்! தெளிந்தறிநிலை நம்முடைய உண்மையான பலம், ஏனெனில் விழிப்புணர்வுடான நம் அறிநிலை மட்டுமே நம் கையில் உள்ளது.

தெளிந்தறிநிலை என்பது பரிவான, அன்புள்ளம் கொண்ட நிலை. அந்நிலையிலிருந்து நமக்கு நேரும் நல்லது கெட்டது என எல்லாவற்றையும் - அவற்றினால் சுக்குநூறாக்கி போய்விடாமல் - அன்புடன் கண்காணிக்க முடியும்; வாழ்க்கையை சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும் வழிநடத்த முடியும்.

தெளிந்தறிநிலையின் இரு பகுதிகள்

முதல் பகுதி இருட்டில் ஏற்றிய ஒளி போன்றது, இரண்டவது பகுதி பார்க்கும் திறன் போன்றது. எனவே இரண்டு பகுதிகளும் நெருங்கி ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.

தெளிந்தறிநிலையின் அவசியம் என்ன?

நம் சௌகரியங்களும் வசதிகளும் மிகவும் பெருகிவிட்டது. ஆனால் அதற்கேற்ற நிம்மதியும் சந்தோஷமும் பெருகிவிட்டதா? ஒவ்வொருத்தரும் எல்லா மட்டத்திலும் அதிகமான சுமையையும், மனஅழுத்தத்தையும் உணர்கின்றனர். வெளிப்புற காரணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், நம் வாழ்வின் அதிமுக்கியமான விலைமதிப்பற்ற ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம், அது நம் ஆரோக்கியமான, தரமான, சந்தோசமான மனது! இன்று வளரும் குழந்தைகள் சிறிய வயதிலேயே அதிகமான மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வை உணர்கின்றனர்.

தியானம் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த பயிற்சிமுறைகள், நம் உடலின் செல் (உயிரணு) மட்டத்திலிருந்து மூளையின் கட்டமைப்பு வரை எல்லா நிலைகளிலும் நன்மை பயப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. தெளிந்தறிநிலை பயிற்சிகளினால் நம்மைப்பற்றிய விழிப்புணர்வு மேலும் உயர்கிறது. அதனால், நம் தடுமாறாத நிலைத்தன்மை அதிகரிக்கிறது; நம் உணர்ச்சிகளை அறிவார்ந்த முறையில் முதிர்ச்சியுடன் கையாள முடிகிறது. தெளிந்தறிநிலை நம் நல்வாழ்வு, மகிழ்ச்சிக்கான அஸ்திவாரம்.

நாம் அனுபவிக்கும் இன்பம், துன்பம் இரண்டுமே நம் மனதை பொறுத்தே உள்ளதால், அது அவ்வாறு செயல்படுகின்றது என்பதை நன்கு அன்யோன்யமாக தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா?

Mindfulness Meditation

தெளிந்தறிநிலை தியானம்

தியானம் என்பது நம் பிரச்சினை, வலிகளிலிருந்து தப்பி ஓடுவதல்ல, அவற்றை நெருங்கிச் சென்று அன்யோன்யமாக தெரிந்து கொள்வது. பல்வேறு சத்தங்கள், காட்சிகள், கற்பனைகள் போன்றவற்றை பயன்படுத்தும் தியான முறை செயற்கையான தற்காலிக இளைப்பாறுதலை, அமைதியை தரலாம்; ஆனால் அது தெளிந்தறிநிலை வளர்ச்சிக்கோ, மனத்தெளிவிற்கோ, அல்லது மன சுத்திகரிப்பிற்கோ வழிவகுக்காது.

தெளிந்தறிநிலை தியானம் (mindfulness meditation) ஆழ்ந்த இளைப்பாறுதளுக்கும், மனத்தெளிவிற்கும், மனதிடத்திற்கும் இட்டுச்செல்லும். அதிலிருந்து மன சுத்திகரிப்பிற்கு வழிவகுத்து, இயல்பாக அமைதிக்கும், இணக்கத்திற்கும், சந்தோசத்திற்கும் வழிவகுக்கும்.

தெளிந்தறிநிலை தியானம் என்பது தெளிந்த விழிப்புணர்வை வளர்க்கும் ஒரு பயிற்சி களம், அதனால், தெளிந்தறிநிலை நம் இயல்பாக வளர்ச்சியடையும். மேலும் இது நம் உடல் மற்றும் மனதின் அன்றாட சுமைகளைத் தணித்து புத்துணர்ச்சியடையச் செய்வதற்கு உதவும். இவ்வாறு நம் பெரும் சுமைகளை, சில நிமிடங்களுக்கு சற்றே இறக்கி வைத்து முழுமையாக ஓய்வெடுக்க கற்றுக்கொள்ளும் போது, நம்மால் துவண்டுவிடுடாமல் தொடர்ந்து திறம்பட வேலை செய்ய இயலும்.

"மனச்சோர்வுடன் இருந்தால் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். கவலையுடன் இருந்தால் எதிர்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நிம்மதியாக இருந்தால் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்." — லாவோ-ட்சு

தெளிந்தறிநிலை தியானம்: எளிய அடிப்படை செய்முறை

"விடாப்பிடியாக பற்றிக்கொள்ளும் நம்முடைய பாங்கு, அதே எண்ணங்களையும், எதிர்வினைளையும் மீண்டும் மீண்டும் உருவாக்கி அதிலேயே நம்மை மூழ்கி சிக்க வைக்கின்றன. இந்த காரண-விளைவுகளை நாம் தெளிவாக கவனித்தால், அதிலிலிருந்து விடுபடும் உத்தியை நாம் இயல்பாக கண்டு கொள்ளலாம். அப்போது நம்முடைய பல தலைமுறை சுமைகளையும், குப்பைகளையும் எறிந்து விட்டு, ஒரு புதிய, தெளிவான, மேன்மையான அத்தியாயத்திற்குள் செல்லலாம்!" — பெமா சோட்ரான்

"தினமும் தியானம் செய்ய இருபது நிமிடம் கூட இல்லை என்றால், ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும்." — ஜென் பழமொழி