ஸ்டீபன் கார்ப்மேன் (Stephen Karpman) உருவாக்கிய, உளவியல் சார்ந்த நாடக முக்கோணம் (Drama Triangle) மாதிரி மனித சமூக தொடர்புகளில், உறவுகளில் ஏற்படும் சண்டை, சச்சரவு, முரண்பாடுகளில் உள்ள அழிவுத்தரும், பயனற்ற மனநிலைகளை, அதன் தொடர்புகளை விளக்குகின்றது. மனிதன் நடத்தும் இந்த நாடக மேடையில் மூன்று பாத்திரங்கள் (மனநிலைகள்) - அது தலைகீழ் முக்கோண அமைப்பில் குறிக்கப் படுகின்றது.

Mindfulness Meditation

(1) பலிகடா/ பாவப்பட்டவர் (Victim)

எப்பொழுதெல்லாம் நாம் எரிச்சல், வருத்தம், சலனம், இறுக்கம், ஏமாற்றம், அதிர்ப்தி, கோபமாக உணரும்போது, நம் உள்-உணர்வுகளுக்கு வெளியிலுள்ள வேறு எவரோ, எதுவோத் தான் காரணம் என நம்பும் போது, நாம் இந்த பலிகடா/பாவப்பட்டவர் பாத்திரத்தை ஏற்கின்றோம்.

(2) சண்டைகாரர்/ கோபக்காரர் (Persecutor)

நம்முடைய சொந்த அல்லது நமக்கு தேவையானவர்களின் "பலிகடா/ பாவப்பட்டவர்" நிலையிலிருந்து இந்த மனநிலைக்கு செல்கின்றோம்.

(3) மீட்பர்/ காப்பாற்றுபவர் (Rescuer)

இவரின் வார்த்தைகள், "நான் உன்னை காப்பாற்றுவேன்!" என்பதாக இருக்கும். தனக்கு எல்லாம் தெரியும், தான் எல்லாம் அறிந்தவர் என்பது இவரின் மனநிலையாக இருக்கும்.

இந்த மூன்று மனநிலைலும் உண்மையான, முழுமையான நம் ஆழ்மன ஆசைகள், தேவைகள், காரணங்கள் நமக்கு எளிதாக தெரிவதில்லை. பொதுவாக, நம் உள்மனம் சுயலாபத்தையும், குறுக்கு வழிகளையும் நாடுவதால், நாம் பிரச்சனைகளை தெளிவாக, முழுமையாக பார்ப்பதில்லை. இந்த மனநிலைகளிலிருந்து நாம் ஏற்படுத்தும் பாதிப்புகளை, சேதங்களை, அவலங்களை (நமக்கும், மற்றவர்களுக்கும்), நாம் உணர்வதில்லை.

இந்த நாடக முக்கோண பிடியிலிருந்து வெளிவருவதற்கு...

நம் மனம் உணர்ச்சி வசத்திலிருந்து, நாடகத்திலிருந்து முழுவதும் விடுபட, சில வினாடிகள், நிமிடங்கள், நாட்கள், மாதங்கள், அல்லது வருடங்கள் ஆகலாம். அதுவரை, சம்மந்தப்பட்ட நபருடனான தொடர்புகளை ஒரு பாதுகாப்பான எல்லைக்குள் வைத்துக்கொள்ளலாம். மேலும், மேலும் நம்மையும், அடுத்தவரையும் காயப்படுத்தி கொண்டு இல்லாமல், நம் தொடர்புகளை எளிமையான முறையில் குறைத்துக் கொள்ளலாம்.

உணர்ச்சி வசத்திலிருந்து, நாடகத்திலிருந்து முழுவதும் விடுபட்ட நிலையில், தேவைப்பட்டால் அதுபற்றி சம்மந்தப்பட்ட நபருடன் உரையாடலாம். அது அடுத்தவரை குறைகூறுவதற்காகவோ, அவர் மீது பழிபோடுவதற்காகவோ இல்லாமல், நம் சூழல் மற்றும் உணர்வுகளை மட்டுமே சார்ந்ததாக இருக்க வேண்டும். அது மறைமுகமாக இல்லாமல், எந்தவித உள்குத்தம் கொண்டு இல்லாமல், எளிமையாக நேர்மையாக இருக்க வேண்டும்.

மேலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நம் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதாக மட்டுமே இருக்க வேண்டும். அவர் எப்படி எடுத்துக் கொள்கின்றார் என்பது அவரின் உரிமை, அது அவரின் வாழ்கை. மேலும், மேலும் அதை கிண்டி, நம்மையும், அடுத்தவரையும் காயப்படுத்திக் கொண்டு இருக்காமல், அதை தாண்டி நாம் பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தில் சில நேரம் நாம் செய்யும் திறமையற்ற அல்லது முறையற்ற செயல்களுக்கு வேண்டுமானால் சாக்குப்போக்கு சொல்லிக் கொள்ளலாம், ஆனால் எந்த ஒன்றுக்காகவும், அது எவ்வளவு பெரியது என்றாலும், எவரையும் தொடர்ந்து மனத்தளவிலோ, சொல்லளவிலோ, செயலளவிலோ கொடுமைப் படுத்துவது, சித்திரவதை செய்வது மிகப்பெரிய கொடூர செயல்.

நாடக முக்கோணத்திற்கு ஒரு மாற்றுமுறை முக்கோணம் - தலைகீழ் நாடக முக்கோணம், மாற்றுமுறையில் நேராக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய பண்புகள்:

பிரச்சனைகளை, சச்சரவுகளை, முண்பாடுகளை விழிப்புணர்வுடனும், அறிவுடனும், அன்புடனும், பொறுப்புடனும் அணுகுவது; நாம் யாரை விடவும் தாழ்ந்தவரோ, உயர்ந்தவரோ இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொள்வது.

Mindfulness Meditation

(1) படைப்பாளி/ பொறுப்பாளி (Creator)

முதலில் வாழ்க்கையின் வலி/துயர/துக்கங்களை ஏற்று கொள்வது. அது வாழ்வின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ளாதவரை, நாம் அடுத்தவரை, மற்றவற்றை குறை சொல்லி கொண்டு, அல்லது மீட்பர்களின் கையில் மாட்டிக்கொண்டு தான் இருக்க முடியும். நாம் நம் வாழ்க்கையின் படைப்பாளியாக/ பொறுப்பாளியாக இருக்க முடியாது.

(2) தெளிவுபடுத்துபவர்/ சவால்கொடுப்பவர் (Challenger)

பலிகடா மனநிலையை தெளிவுபடுத்துவது. தேவைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடையிலான தொடர்புகளை விளக்குவது.

(3) பயிற்சியாளர்/ ஊக்குவிப்பவர் (Coach)

மீட்பருக்கும், பயிற்சியாளருக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, ஒவ்வொருவரும் ஒரு படைப்பாளியாக பொறுப்புடன் தன்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டு, முடிவுகளை சுயமாக எடுக்க முடியும் என்று நம்புவது.

நம்மை, நம் வாழ்க்கையை யாரோ ஒருவர் காப்பாற்றுவார், பார்த்துக்கொள்வார் என நம்பும் வரை, உண்மையில் நாம் இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை என்பதாகவே இருக்கும். அதுவரை நாம் பலிகடா நிலையில் உள்ள பாவப்பட்ட ஜென்மங்களே!